மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது

அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது

அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !

 

 

இறையவன் அருளினால்

இகந்தனில் உதித்திட்ட

மறையவன் படைப்பினில்

மறுவிலா தொளிர்ந்திட்ட

 

 

புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !

 

2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான்

அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான்

ஆதத்தை அவனே இறக்கி வைத்தான்

அவர் பெயரால் பாவங்கள் மன்னித்தான்

 

 

எங்கும் எதுவும் இயங்குவதில்லை அவனது கட்டளையின்றி

என்றும் அவனது கட்டளையில்லை அவரது பொருட்டாலன்றி !

 

 

 

அவன் பேரருளே

அவர்  காரணமே !

 

3. புண்ணிய நபியின் பிறந்த நாள் இன்று மீலாது

புவியினில் அவரின்றி உயிரினம் எதுவும் வாழாது

மறுமையின் நிழலும் சுகமும் எவர்க்கும் மீளாது !

 

 

இகமது வாழ்ந்திட

ஏற்றங்கள் தந்திட்ட

நிறைமதி தோற்றிடும்

எழில்மிகு முஹம்மதர்

 

 

புனித நல் மணியின் பிறந்த நாள் இன்று மீலாது !

 

4. அகிலத்தில் நபியாய்ப் பிறந்தவரில்

அதிமுதலாய் அவரைப் படைத்திட்டான்

புகழ் கொண்ட நான்கு ரசூல் மாரில்

புனிதத்தின் கருவாய் அமைத்திட்டான்.

 

 

அகமகிழ்ந்தவனே பெருமிதம் கொண்ட ஐம்பெரும் தூதரில்

அறந்தனில் சிறப்பினில் பெருமையில் நிறைந்து

அன்பினைப் பெற்றவர் அவரே !

 

 

அவன் ஓதும் புகழ்

அவர் மீதிறங்கும்

 

5. கண்ணிய நபியின் பிறந்த நாள் இன்று மீலாது

காலங்கள் தோறும் அவரின்றி உண்மை வாழாது

கறைகளை விரட்டும் அறிவொளி நின்றே ஆளாது !

 

 

புவியினில் ஒழுக்கமும்

பொறுமையும் நிலைத்திட்ட

உவகையும் ஒற்றுமையும்

அன்போடு உயர்த்திட்ட

 

 

காசிமெந் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது !

 

 

 

6. மறைகளின் சிகரம் நல் குர்ஆனை

மனிதகுலம் திருந்திட அளித்திட்டார்

திருவாய் மனிதனை உருவாக்கும்

தெளிவான மார்க்கம் காண்பித்தான்

 

 

மறுவிலா துயர்ந்து நிறைவினைப் பெற்றிவ் வுலகம் புரந்திட

குறையற வாழும் குணத்தின் குன்றாய் இணையற

அவரைப் படைத்தான்

 

 

அவர் பேர் சொல்லியே

அகிலம் நின்று வெல்லுமே !

 

-ஆலிம் செல்வன்

Leave a Reply

TOP